You are currently viewing கூட்டாஞ் சோறும்…கூழ் வற்றலும்…

கூட்டாஞ் சோறும்…கூழ் வற்றலும்…

அவசியம் முழுமையாக படியுங்கள் Rtn.நெல்லை பாலு நிறுவனர் மதுரையின் அட்சய பாத்திரம் மற்றும் அனுஷத்தின் அனுக்கிரகம் மதுரை.cell.9442630815 போஜனப்பிரியர்கள்

திருநெல்வேலிக்காரர்கள் போஜனப்பிரியர்கள் என்றே சொல்ல வேண்டும்.

திருநெல்வேலி டவுண் காந்தி சிலை அருகே ஒரு காலத்தில் இருந்த போத்தி ஹோட்டல் பற்றி கதை கதையாக சொல்வார்கள் பெரியவர்கள்.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வீடுகளில் சமைக்கும் ” கூட்டாஞ்சோறு ” ரொம்ப பிரபல்யமானது. எல்லாக்காய்களையும் சேர்த்துப்போட்டு சமைக்கும் இந்த உணவு நல்ல ருசியானதும்கூட. (வெஜிடபிள் பிரியாணிக்கும் கூட்டாஞ்சோறுக்கும் வித்தியாசம் உண்டு.)
கூட்டாஞ்சோறுக்கு ” தொட்டுக்கிட” கூழ்வற்றல், வெங்காய வடகம், சீனியவரக்கா வத்தல், கல்லிடைக்குறிச்சி அப்பளம்.. என்று ஏகப்பட்ட டிஸ்கள் உண்டு.

இதைப்போல, தேங்காய்ப்பாலில் செய்யும் “சொதிக்குழம்பு” பிரபலம்.
அதிக காரம் இல்லாத இந்த குழம்பு வகை, தென்னை அதிகம் விளையும் இலங்கையில் இருந்து வந்தது என்பார்கள்.

ஒரு குறிப்பிட்ட சமூகத்தில், கல்யாணத்திற்கு மறுநாள் சொதிச்சாப்பாடு போடுவது மரபு.

“மாப்ளெ அந்தானைக்கு கிளம்பீராதீரும்.
இருந்து நாளைக்கு மறுவீட்டு சொதிச்சாப்பாட்டை சாப்பிட்டு போங்க..” – என்று உரிமையோடு சொதியின் ருசிக்கு அழுத்தம் கொடுப்பார்கள் என்றால் பார்த்துக்கோங்களேன்.

சொதிக்கு உருளைக்கிழங்கு பொரியலும், இஞ்சி பச்சடியும் உற்ற துணை. சொதிக்குழம்பு செய்வதற்கு நல்ல அனுபவம் வேண்டும். தண்ணீர் கொஞ்சம் அதிகமானாலும் சொதப்பி விடும். தேங்காய்ப்பால் கெட்டியாக இருக்க வேண்டும். அதில், முருங்கைக்காய், அவரைக்காய், காரட் போன்ற காய்களைப்போடுவார்கள். சொதிக்குழம்போடு சேர்த்து சாப்பிட முன்பு குறிப்பிட்ட அப்பளம், கூழ்வத்தல் வகையறாக்களும் கட்டாயத்தேவை.

மாவட்டத்தின் கறி வகைகளுள் முக்கியமானது அவியல்.
வாழைக்காய்,கத்தரிக்காய், அவரைக்காய் போட்டு செய்வது.
இவர்களின் உணவில் அன்றாடம் சேர்க்கும் மற்றொன்று அரைக்கீரை.

அரைக்கீரை செய்யும் நாளில் பெரும்பாலும் புளிக்குழம்பு உண்டு. இரண்டையும் கலந்து சாப்பிடும் வழக்கமும் இருக்கிறது. இரவு மீதமுள்ள அவியல், குழம்பு, கீரை போன்றவற்றை மண் சட்டியில் போட்டு கிண்டி ” பழங்கறி ” செய்வார்கள்.
நன்றாக சுண்ட வைப்பதால், “சுண்டைக்கறி” என்றும் சொல்லப்படுவதுண்டு.

” சுண்டைக் கறியின் சுவையறியார்
அறியார் பண்டைத்தமிழ்ப் பெருமை”

  • என்று திருநெல்வேலிக்காரன் பாட்டை வேறு எழுதி வச்சிருக்காம்னா
    பார்த்துக்குங்க.

தமிழ்நாட்டின் பெருமைக்கும் சுண்டைக் கறிக்கும் ஏதாச்சும் சம்பந்தம் இருக்கா ?
( சவத்தை விட்டுத் தொலைங்க அண்ணாச்சி. )

வீடுகளில் இலை போட்டு பரிமாறுவது என்பது இங்கே தனி கலை.
சாப்பிடத்தானே போறோம் என்று வாழை இலையை இஷ்டப்படி போடக்கூடாது.

திருமணம் போன்ற விஷேச வீடுகளில் இலையின் நுனிப்பகுதி இடதுகைப்பக்கம் இருக்குமாறு இலையை போடவேண்டும். தண்ணீரை ஒரு குத்தாய் எடுத்து தெளித்து இலையை துடைத்தபிறகு, முதலில் உப்பும், மிதுக்கு வத்தலும் ஓரத்தில் வைப்பார்கள். அடுத்து பிட்டு,பொரியல், அவியல்,பச்சடி வைத்து விட்டு, இலையின் கீழ்ப்பகுதியில் வலதுபுறத்தில் பருப்பும் வைப்பர். நடு இலையில் சோறு படைத்தவுடன், அதில் ஒரு பகுதியை இடது கைப்பக்கம் ஒதுக்கிவிட்டு மீதியுள்ள சோற்றை பருப்பு,நெய்,சாம்பார் விட்டு பிசைந்து உண்பார்கள்.

அதன் பிறகு ரசம், வத்தல் குழம்பு, பாயாசம் (பாயசத்தை இலையில் ஊற்றி,அதன் மேல் அப்பளம், பூந்தி போட்டு கலந்து உண்பது உண்டு), & மோர் என்ற ஒரு முறைப்படியே சாப்பிடுவதை மரபாய் வைத்துள்ளனர்.

இதிலே, வீட்டுக்கு மணமாகி வந்த புது மருமகள் பொரியலையோ, பருப்பையோ இடம் மாற்றி பரிமாறி விட்டால் போதும்.

” பொண்ணை என்ன வளத்துருக்காவோ..
இலையில எப்படி பரிமாறணும்னு கூட தெரியாம..”
என்று ஏகடியம் பேசுவார்கள்.

” காலம் ரொம்ப மாறிப்போச்சு வே..
இலையப் போட்டு சாதம் வச்சு நெய் ஊற்றுற காலமெல்லாம் போச்சு..
சோத்துக்கு முன்னாடி பிரியாணின்னு ஒன்ன வச்சுட்டு போறான்..
அத சாப்பிட்டு அப்புறம் சோத்தை திங்க முடியுமா வே..
எந்தப் பேதீல போவான் இதைக் கண்டுபிடிச்சான்னு தெரியல.”
என்று முணங்கும் பெருசுகளை இப்போதும் திருநெவேலியில் பார்க்கலாம்.

அவர்கள் எல்லாம் சொத்தை விற்று தின்னு தீத்த பரம்பரையின் கடைசிக்கண்ணியாக இருக்கவும் வாய்ப்புண்டு.

டவுண் ஆர்ச் அருகே உள்ள விஞ்சை விலாஸ் இட்லி புகழ் பெற்றது.
அங்கே ஆவி பறக்கும் இட்லிகள், தோசைகள் மட்டுமின்றி, தேங்குழல், பாசிப்பருப்பு உருண்டை, தட்டை, சீடை, கைசுற்று முறுக்கு, என பல தின்பண்டங்களும் கிடைக்கும்.

நீங்கள் நன்னாரி சர்பத் குடித்திருப்பீர்கள். நன்னாரிப்பால் குடித்திருக்கிறீர்களா?
அது இங்கே பேமஸ். சில காலம் முன்பு வரை நாலஞ்சு மரப்பெஞ்சுகள் மாத்திரம் போடப்பட்டு பத்து பன்னிரண்டு பேரு மட்டுமே சாப்பிட முடியும் அளவிற்கு தான் இடம் இருந்தது. நேரமானாலும் பரவாயில்லை என்று வாசலில் ஒரு கூட்டம் காத்துக்கிடக்கும்.
” இந்த மாறி இட்டிலி வீட்ல கூட கெடைக்காது டே ..” என்று சொல்லிக்கொள்வார்கள். தற்போது விசாலமாய் தோற்றமளிக்கிறது விஞ்சை விலாஸ்.

அங்கிருந்து சந்திப்பு வந்தால்,
நூறாண்டு பாரம்பரியமிக்க சந்திரவிலாஸ் ஓட்டல் ரொம்பவே பிரபலம்.
“சந்திர விலாஸ் காபி குடிச்சா, அடி நாக்கில் நாலு நாளைக்கு மணக்கும்”
என்று சொல்லி பழைய நெனைப்பில் மூழ்கும் பல பெரியவர்கள் இன்றும் உண்டு.
இங்கு சாம்பார், ரசத்திற்கு தினமும் வீட்டில் இருந்து பொடி இடித்து வரும் என்று சொல்வார்கள்.

மதியம் இங்கே போடும் தவல் வடைக்கு பெரிய ரசிகர் கூட்டம் உண்டு. வடையில் தேங்காய் பல்லு பல்லாய் நறுக்கி போட்டிருப்பார்கள். அக்காலங்களில் மதியம் தரையில் அமர்ந்து இலை போட்டுத்தான் சாப்பாடு சாப்பிடுவார்கள் இந்த பாரம்பரிய உணவு விடுதியில்.

பாலஸ் டி வேல்ஸ் சினிமாக்கொட்டகை அருகே இருந்த மாருதி விலாஸ் ஓட்டல் பூரிக்கிழங்கு மணம், பாளையங்கோட்டை வரை கூட அடிக்கும் என்பார்கள். ஓரணாவிற்கு ரெண்டு பூரியும் கை நிறைய கிழங்கும் கொடுப்பார்கள் என்று சொல்லும் 85 வயது காஷ்யபன்.

“சாயந்தரம் இதை சாப்பிட்டம்னா மறுநாள் காலை வரை பசிக்காது”

  • என்று சொல்லி சிரிக்கிறார்.

பாளையங்கோட்டையில் பஸ் ஏறி, ஜங்ஷன் வந்து
முந்திரிப்பருப்பு மெது பக்கோடா அல்லது பாஸந்தி சாப்பிட ஒருத்தன் வருகிறான் என்றால் அவன் ராஜ் கஃபே பிரியன் என்று அர்த்தம்.

சந்திப்பு பேருந்து நிலையம் எதிரே இருந்த ராஜ் கஃபேயில், நெல்லைக்கு வரும் திரைப்பட நட்சத்திரங்கள் சாப்பிட்டதாக சொல்வார்கள். கை விரல்களில் ஏழெட்டு மோதிரங்கள் மின்ன கோல்டு பிரேம் கண்ணாடி, மொறுமொறு வெள்ளை வேட்டி சட்டையில் சிரித்த முகத்துடன் இருந்த நடராஜ பிள்ளை முகத்தை பலர் மறந்திருக்க மாட்டார்கள். சின்ன வயதில் கொழும்பில் ஓட்டலில் பணிபுரிந்த அனுபவம், அந்த அனுபவத்தை திருநெல்வேலியில் புகுத்தி வெற்றி கண்ட மனிதர்.

மினி காபி என்ற கான்செப்ட்டை திருநெல்வேலியில் 1970 களிலேயே அறிமுகப்படுத்திய பெருமை இவருக்கு உண்டு.

இங்கே காபி 70 பைசா. மினி காபி 40 பைசா. பித்தளை வட்டகையில் உள்ள டம்ளரில் நுரை பொங்கி வழியும் ராஜ் கஃபே காபி எவரையும் வசீகரிக்கும் தன்மை கொண்டது.
இங்கு மூன்று நேரமும் கூட சாதம் கிடைக்குமாம்.

நெல்லை லாட்ஜ் வளாகத்தில் இருந்த மற்றொரு உணவகம் சுப்ரபாத்.
வீட்டு சாப்பாடு போல இருக்கும்.

சாலைக்குமாரசாமி கோவில் எதிரே இருக்கும் கௌரி ஷங்கர் உணவு விடுதியில் அடைஅவியல் பிரபலம்.

திருபாகம் சாப்பிடணும் என்றால், சங்கர் கஃபே தான்.

இட்லி, தோசை தவிர்த்து சப்பாத்தி பிரியர்கள் விரும்பும் ஓட்டல் என்றால் அது ராஜஸ்தான் ஓட்டல் தான்.

TN சந்திப்பு – தானா மூனா கட்டிடத்தில், மாடியில் முகம்மத் ராஃபியின் இந்திப்பாடலை ரசித்துக் கேட்டபடியே சப்பாத்திகளை எண்ணிக்கையின்றி சாப்பிடலாம்.
எண்ணெய் இல்லாத மெதுவான சப்பாத்திகளுக்கு துணையாக சால்னா, வெள்ளரிக்காய், தக்காளி, வெங்காய துருவல், கெட்டிதயிர், ஒரிஜினல் மாம்பழ ஜூஸ் என சுவையான சாப்பாடு. வட இந்திய ஓட்டல் ஒன்றில் இருப்பதான உணர்வு எப்போதும் இருக்கும் இங்கே.

பாளையங்கோட்டையில் கல்வி நிறுவனங்கள் இருக்கும் அளவிற்கு உணவகங்கள் இல்லை என்று ஒரு நண்பர் கூறினார்.

ஒரு காலத்தில் பாளையங்கோட்டை கோட்டூர் சாலையில் இருந்த தோணி செட்டியார் கடையில் இட்லி,தோசை,ஊத்தாப்பம் விலையும் மலிவு, ருசியோ அதிகம் என்று சொல்லுவார் எல்ஐசி இசக்கிராஜன்.

இங்கிருந்த குமரன் கஃபே, சங்கர் கஃபே போன்ற ஓட்டல்களும் அக்காலத்தில் பிரபலமானவை என்கிறார்.

அத்தியாயத்தில் முன்பு குறிப்பிட்ட சொதி சாப்பாடு எங்கு கிடைக்கும் என்று உங்கள் மனதில் இதற்குள் தோன்றியிருக்க வேண்டும்.

பாளையங்கோட்டை அருணாச்சலம் பிள்ளை ஒரு பிரபல தவசுப்பிள்ளை.

தவசுப்பிள்ளை என்ற வார்த்தை கூட இங்கு தான் அதிகம் புழக்கத்தில் உள்ள சொல்.

நீங்கள் தொலைக்காட்சிகளில் பார்க்கும் தாமு, வெங்கடேஷ் பட், மல்லிகா பத்ரிநாத் போன்றோரை செஃப் என்று சொல்வோம் இல்லையா..
அவர்களைத்தான் நெல்லையில் தவசுப்பிள்ளை என்று அழைக்கிறார்கள்.

உணவு ஆர்டரின் பேரில் தயாரித்துக்கொடுப்பவர் தவசுப்பிள்ளை அருணாசலம்பிள்ளை.

பாளையங்கோட்டை தெற்கு பஜாரில் உள்ள இவரது வீட்டை கடக்கும்போதெல்லாம் சாம்பார், அவியல் வாடை மணக்கும். நெல்லையின் சொதி சாப்பாடு தயார் பண்ணுவதில் நம்பர் ஒன் இவரே.

500 பேருக்கு சொதிச்சாப்பாடு என்றாலும், தேர்ந்த ருசியுடன் தயார் செய்து தருவார்.
பல அலுவலகங்களில் பணிநிறைவு விழாக்கள், இட மாறுதல் போன்ற நிகழ்விற்கு விருந்து சாப்பாடு எனில், அருணாச்சலம் பிள்ளை எண்ணிற்கே போன் போகும்.

அலுவலக வாசலுக்கே வண்டியில் வந்து இறங்கி, இலை போட்டு பரிமாறி விட்டு செல்வார்கள் அவரது பணியாட்கள். 100 பேருக்கு நாம் ஆர்டர் செய்தால்,
125 பேர் கூட வயிறு முட்ட சாப்பிடலாம். விலையும் குறைவு.

“நம்மிடம் ஆர்டர் கொடுத்தால், சாப்பாடு தட்டுப்பாடு என்ற ஆவலாதியே வரக்கூடாது சார்.

மனுசங்க வயிறு நிறைய சாப்பிட்டு விட்டு, வாழ்த்தி விட்டுப்போகணும் “
என்பார் தவசுப்பிள்ளை அருணாச்சலம் பிள்ளை. தற்போது அவரது மகன் நடத்தி வருகிறார்.

நெல்லையில் ஏராளமான உணவகங்கள் வந்து விட்டன.

இருந்தாலும், மேலே சொன்ன உணவகங்கள் காலாகாலத்துக்கும் பெயர் சொல்லக் கூடியவை.

திருநெல்வேலி எங்கூருல்லா

  • திருநெல்வேலிக்காரன்

Leave a Reply