படித்ததில் பிடித்தது.யார் கடவுள்..??

மணி இரவு 8…🕰️

பசி வயிற்றைக் கிள்ளியது…😣

இன்றைக்கு வேலைக்காரி வரவில்லை…🙄 சமையல்காரியும் வரவில்லை…😥

எனக்கு சமைக்க மூடும் இல்லை..🤨

இது மாதிரி நேரங்களில்…
ஸ்விக்கி அல்லது ஜூமாட்டோவை துணைக்கு அழைப்பதுண்டு..

இன்று அதற்கும் மூடு இல்லை…

வெளியே வீசிய குளிர் காற்று, என்னோடு சற்று உறவாடு, என்று என்னை அழைக்க….

டூ வீலர் ஸ்டார்ட் செய்து பார்த்தேன்…🛵

மூன்று நாட்கள் டூவீலரை எடுக்கவில்லை…

என் மேல் அதற்கு கோபம் போல…
எனது உதை…
பயனற்று போனது…🤪

ஒரு நல்ல டிபன் சாப்பிட
வேண்டும் என்றால் சிறிது தூரம் நடக்க வேண்டும்…

சின்னதாக ஒரு உரத்த சிந்தனை….
பிறகு…
ஹோட்டலை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்…👨🏼‍🦯

இன்று ஏன் எனக்கு இப்படியெல்லாம் நடக்க வேண்டும்?😯

வீட்டில குடை இருந்தும், இப்போது மழை வராது என்று நானே முடிவு செய்து ஹோட்டலுக்குப் போகலாம் என்று ஏன் தோன்றியது?🤔

இரவு 8 மணிக்கு …
ஓட்டலுக்கு போனவன், அங்கேயே சாப்பிட்டுவிட்டு வந்திருக்கலாம்.😊
சாப்பிடும் நேரத்தில் மழை வந்திருந்தால், கொஞ்ச நேரம் அங்கேயே நின்று விட்டு வந்திருக்கலாம்🚶‍♂️.

அதையும் செய்யாமல் ஏன் பார்சல் கட்டிக்கொண்டு, தண்ணீர் பாட்டிலும் வாங்கிக்கொண்டு உடனே கிளம்ப வேண்டும் .😎

எல்லாம் ஏன் இன்று இப்படி ஏடா கூடாமாக நடக்கிறது 🤔.

இப்படி வரும் வழியில், கொட்டும் அடை மழையில், ஒதுங்க இடம் கிடைக்காமல் அலைவதற்கா?😗

கொஞ்ச நேரம் 🚶‍♀️🚶‍♀️🚶‍♀️நடந்து, ஓடி தேடியதில் கடைசியாக சின்னதாக பிவிசி சீட் போட்ட பஸ் ஸ்டாப் போல் ஒரு இடம் தென்பட்டது. 🧐

அருகில் சென்றதும் தான் தெரிந்தது….

அது அந்த வீட்டின் மதில் சுவர் அருகில் பதிக்கப் பட்ட கிருஷ்ணர் சிலைக்கு மேல் வைக்கப்பட்ட ஒரு சிறிய தடுப்பு என்று..

4×4 சதுர அடியில் ஒரு சிறு கிருஷ்ணர் சிலை…. அதற்கு ஒரு கம்பிக் கதவு போட்டு பூட்டப்பட்டிருந்தது.

கிருஷ்ணருக்கு துணையாக அந்த சிறிய தடுப்பில் இப்போது நானும்….

இங்கே மழைக்கு ஒதுங்கி நின்ற போது….

என் மனதில் தோன்றியவைகளைத் தான்,
நான் இப்போது உங்களிடம் பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.

உலகையெல்லாம் காக்கும் ரட்சகன் நீ…
உன் சிலையை காப்பாற்றிக் கொள்ள உன்னால் முடியாது என்று நினைத்து மனிதன் போட்டிருக்கும் இந்தக் கம்பிக் கதவை பார்க்கும்போது உனக்கு சிரிப்பு🤣 வரவில்லையா? என்று நினைத்துக் கொண்டு அங்கிருக்கும் கிருஷ்ணருடன் மனதில் பேச ஆரம்பித்தேன்.😎

உனக்குள்ளே இவ்வுலகம்…
ஆனால்…
நீயோ இந்த கம்பி கதவுக்கு உள்ளே…

எல்லாவற்றுக்கும் ஒரு காரணம் இருக்கப்பா…

என்று என் குருஜி சொன்னது என் நினைவுக்கு வந்தாலும் , என் கேள்விகள் மட்டும் நிற்கவில்லை.

கம்பிக்குள் சிறை வைக்கப்பட்ட நீ,யாருக்கு உதவப் போகிறாய்?

நீயே சரணமென்று வேண்டுபவர்களுக்கு இந்த சிறையைத் தாண்டி எந்த ரூபத்தில் உதவ போகிறாய்?

சரி…யாரைப் பற்றியோ நான் ஏன் பேச வேண்டும்.

என்னைப் பற்றி பேசுகிறேன்.😉
இப்படி வந்து சிக்கிக் கொண்டேனே எனக்கு எந்த ரூபத்தில் வந்து உதவப் போகிறாய்?🙄

இந்தக் கேள்விகள் எல்லாம் என்னுள் எழச் செய்து என்னை விரக்தி அடையச் செய்யும் உன் உள்நோக்கம் தான் என்ன?🤨

என்றெல்லாம் பேசிக் கொண்டிருந்த நான் ஒரு கணம் ஏதோ ஒரு குரல் கேட்டு திரும்பிப் பார்த்தேன்.😯

அந்த மதில் சுவரின் மூலையில்….
பழைய துணி மூட்டை போல் ஏதோ கிடக்க அதைச் சற்று உற்றுப் பார்த்தேன். 👀

அது துணி மூட்டை அல்ல😳 ஒரு மூதாட்டி.🙆‍♀️

பூச்சி… புழு… (சில நேரங்களில் பாம்புகள் கூட) என்று வரையறையே இல்லாமல் எல்லா ஊர்வனமும்… சரமாரியாக வந்து போகும் இடத்தில் ஒரு கிழிந்த அழுக்குத்துணியை மட்டும் சுற்றிக்கொண்டு இங்கு வந்து அடைக்கலம் புகுந்து இருக்கிறாள்.🤥

யாரைப் பெற்ற தாயோ…😥

ஆதரிக்க ஆளில்லாமல் இங்கே அடைக்கலம் வந்து இருக்கிறார் .🥸

அவர் ஏதோ முனகுவது போல் இருந்தது.

உற்றுக் கேட்டதில் என்னிடம் தான் பேசிக்கொண்டு இருக்கிறார் என்று தெரிந்தது.😏

என்னமா வேணும்?
பணிவுடன் நான்.

ஐயா.. சாப்பிட ஏதாவது இருந்தால் கொடுங்கய்யா

அந்த மூதாட்டியின் முனகலின் அர்த்தம் எனக்கு புரிந்தது.

அத்தனை கேள்விகள் பொங்கி எழுந்த என் மனதில் இப்பொழுது ஒரே ஒரு கேள்வி மட்டும் தான் மிஞ்சி நின்றது.🥺

இந்த மழையில்…
இந்த இரவில் …
ஒரு இளைஞன் (நான் என்னையே சொல்லிக்கிட்டேன் ) நானே இவ்வளவு தூரம் நடந்து வந்து சாப்பிட சலித்துக் கொள்ளும்போது…

இந்த மூதாட்டி என்ன செய்வார்? என்ற ஒரே ஒரு கேள்வி.

இந்தாங்கம்மா.. தோசை இருக்கு சாப்பிடுங்க…. தண்ணி பாட்டில் கூட இருக்கு…

நடுங்கி ஒடுங்கின அந்த மூதாட்டியின் கையில் ஓட்டலில் வாங்கிய பார்சலை குனிந்து கொடுத்தேன்.

கிருஷ்ணா நல்லாருப்பா

என்னை ஆசிர்வதிப்பது போல் கையை உயர்த்தி தலையில் கைவைத்து கூறினாள்.

என்னை ஏன் பாட்டி கிருஷ்ணா என்று அழைத்தாள் …🤔

அவள் கிருஷ்ணரிடத்தில் உணவை கேட்டிருப்பால் போலும்… ஆதலால் யார் கொடுத்தாலும் கொடுப்பவன் கிருஷ்ணன் தான் என்ற நம்பிக்கை போலும் அவளுக்கு என்று என்னை நானே சமாதானப் படுத்திக்கொண்டேன்..

இப்போது எனக்குள் திடீரென்று ஒரு பொறி தட்டியது…

எனக்கு எந்த ரூபத்தில் வந்து நீ உதவி செய்யப் போகிறாய் என்று நான் உன்னை கேட்டேன்.

இப்பொழுது புரிகிறது…

உதவி தேவைப்பட்டது எனக்கல்ல…
அந்த மூதாட்டிக்கு என்று…

உதவியதும் நான் அல்ல…
என் ரூபத்தில் நீ என்று…

இப்போது கிருஷ்ணரை பார்க்கிறேன்…

இத் தருணத்தில் மூதாட்டிக்கு நீ தான் நான்….
கம்பிக்குள் இருக்கிற நான் ..
கம்பிக்கு வெளிய இருக்கிற உன்னை வைத்து பாட்டிக்கு எப்படி உணவை வர வைத்தேன் பார்த்தாயா என்று அவர் கேட்பது போல் இருந்தது..

யார் கடவுள் புரிகிறதா…

Leave a Reply